தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது


தமிழ்மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள் 10 பேருக்கு விருது
x

தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய 10 பேருக்கு தமிழறிஞர் விருது மற்றும் தங்கப்பதக்கம் வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.

சென்னை,

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்க்கும் தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா நாரணவலசு கிராமத்தைச் சேர்ந்த இரணியன் நா.கு.பொன்னுசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2022-ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதுக்கு ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் கிராமத்தைச் சேர்ந்த உபயதுல்லாவும், பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், மகாகவி பாரதியார் விருதுக்கு முனைவர் வேங்கடாசலபதியும், பாவேந்தர் பாரதிதாசன் விருதுக்கு வாலாஜா வல்லவனும், திரு.வி.க.விருதுக்கு நாமக்கல் வேல்சாமியும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருதுக்கு கவிஞர் மு.மேத்தாவும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் தேவநேயப்பாவாணர் விருதுக்கு முனைவர் மதிவாணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விருது-தங்கப்பதக்கம்

இவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுபெற்றவர்களுக்கு விருதுதொகை தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலை, தங்கப்பதக்கம், விருது ஆகியவற்றை வழங்கி பாராட்டினார்.

இதேபோன்று பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2022-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதை கவிஞர் கலி.பூங்குன்றனுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2022-ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதை எஸ்.வி.ராஜதுரைக்கும் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருது தொகையாக தலா ரூ.5 லட்சம், தங்கப்பதக்கம் மற்றும் விருது வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

வள்ளலார் பல்லுயிர் காப்பகம்

இதன்பின்பு மீனவர் நலத்துறை சார்பில் வள்ளலாரின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற, காயமடைந்த விலங்குகளை பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்க நிதியுதவி அளிக்கும் வகையில் ரூ.20 கோடி ஒதுக்கீட்டில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் என்ற புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

பின்னர், பிராணிகள் துயர் துடைப்பு சங்கம், பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளுக்கு 2 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல் தவணையாக 88 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மாலை அணிவித்து மரியாதை

முன்னதாக வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள், மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கார்த்திக், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story