மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது


மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருது
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது என்று கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிபவர்கள், மேலும் சிறப்பாக சேவை புரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்-அமைச்சரால் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அதுபோல் இந்த ஆண்டும் சிறப்பாக சேவை புரிபவர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 15.8.2023 அன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் கீழ்காணும் விருதுகள் வழங்கப்படவுள்ளது.

விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு, சான்றிதழும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர், மிக அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர் மற்றும் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு தலா 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.

இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், நிறுவனங்கள், அதற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இருந்து பெற்று பூர்த்தி செய்து உரிய அனைத்து சான்றிதழ்களுடன் வருகிற 26-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் 2 நகல்களில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. எனவே தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story