ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் பெண் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் பெண் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவடி அடுத்த பட்டாபிராம் ஐ.ஏ.எப்.சாலை ஆசிரியர் காலனியில் வசிப்பவர் பெலுசியா (வயது 32). இவர் தனது கணவர் மற்றும் 2 மகளுடன் நேற்று முன்தினம் மாலை ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நிலையில், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து கணவர் மற்றும் மகள்களின் உடலில் ஊற்றி 3 பேரும் தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இது தொடர்பாக அவர்களிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் அவர்களுக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை அப்பகுதியை சேர்ந்த சிலர் போலி ஆவணம் தயாரித்து அபகரித்ததாகவும், அது தொடர்பாக அவர்களிடம் விளக்கம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இது தொடர்பாக பட்டாபிராம் போலீஸ் நிலையம் மற்றும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த குடும்பத்தினர் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.