பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு அவ்வையார் விருது விண்ணப்பிக்க 10-ந் தேதி கடைசிநாள்
கடலூர் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருது பெற விண்ணப்பிப்பதற்கு வருகிற 10-ந் தேதி கடைசி நாளாகும்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 2023-ம் ஆண்டு உலக மகளிர் தினத்தன்று அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு தமிழக முதல்-அமைச்சரால் 8 கிராம் (22 காரட்) எடையுள்ள தங்கப் பதக்கமும் ரூ.1 லட்சத்திற்கான காசோலை, சான்று மற்றும் சால்வை ஆகியவை வழங்கப்படுகிறது.
இந்த விருது பெறுவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 10-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
பெண் குலத்திற்கு பெருமை
குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் மொழி, இனம், பண்பாடு, கலை அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்காக தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும்.
தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம், விருதின் பெயர், யாரிடமிருந்து பெற்றது, பெற்ற வருடம்), சேவை பற்றிய செயல்முறை விளக்கம் புகைப்படங்களுடன், சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக சேவையாளரின்/ சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், சமூகப் பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று, விண்ணப்பதாரர் சமர்ப்பிக்கும் கருத்துருக்களில் பெண்களின் முன்னேற்றத்திற்கான சேவை புரிந்த விவரங்களை ஒரு பக்க அளவில் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் Soft Copy மற்றும் Hord Copy சமர்ப்பித்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.