போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் வாகனங்கள் நிறுத்த தடை
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஜெயராஜ் ரோட்டில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்க, மாநகராட்சியில் நேற்று மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு பகுதியில் மாநகராட்சியின் பலஅடுக்கு வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. ஆனாலும் அந்த பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு வரும் மக்கள் ரோட்டோரத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றனர். இதனால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருந்தது. இது தொடர்பாவும், ஷேர் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆணைாளர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தடை
கூட்டத்தில் ஜெயராஜ் ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அனைத்து வாகனங்களையும் வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதே போன்று ஷேர் ஆட்டோக்கள் ஒரே வழித்தடத்தில் மட்டும் இயங்காமல் பஸ் வசதிகள் இல்லாத புதிய வழித்தடங்களில் இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் குழப்பம்
இதனை தொடர்ந்து ஜெயராஜ் ரோட்டில் வாகனங்கள் நிறுத்தாமல் தடுப்பதற்காக கயிறு கட்டப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி கொண்டு, மாடிக்கு நடந்து சென்று எப்படி வாகனத்தை எடுப்பது என்றும் குழப்பத்தில் உள்ளனர்.