வீட்டை சுற்றிலும் தேவையற்ற பொருட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
வீட்டை சுற்றிலும் தேவையற்ற பொருட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பருவமழை பெய்வதால், தூக்கி எறியப்பட்ட பழைய பாத்திரங்கள், பொருட்கள் மற்றும் பூந்தொட்டிகளில் நீர் தேங்கி டெங்கு பரப்பும் கொசுக்கள் வளர காரணமாகி விடுகிறது. தேவையற்ற பொருட்களான தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பழைய பொம்மைகள், பாட்டில்கள், உடைந்த பாத்திரங்கள் போன்ற பொருட்களை வீட்டை சுற்றி போட்டு வைப்பதால் டெங்கு பரப்பும் சூழலை நாம் தோற்றுவித்து விடுகிறோம்.
வீட்டை சுற்றிலும் பழைய பொருட்கள், தேவையற்ற நீர்தேக்க பாத்திரங்கள் வைத்திருப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
டயர், பயன்படுத்தாத உடைந்த சிமெண்டு தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கும் மழைநீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்கள் டெங்கு வைரசுடன் உருவாகிறது.
இந்த அமைப்பின் மூலம் குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான கொசுக்கள் உருவாகிவிடும். மேற்கண்ட பொருட்களை அகற்றுவதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுவதை முற்றிலும் தவிர்க்க முடியும்.
சாதாரணமாக ஏற்படும் சளி, காய்ச்சல் தானாகவே ஓரிரு நாட்களில் குணமாகிவிடும். ஆனால் மலேரியா காய்ச்சல், எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் போன்ற காய்ச்சல்களுக்கு, உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். மருத்துவ சிகிச்சை தாமதமானாலோ சுயமாக மருந்துகள் சாப்பிட்டாலோ போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றாலோ உடல் நலம் கடுமையான பாதிப்புக்குள்ளாக நேரிடும். உரிய சிகிச்சையும் முறையான கவனிப்பும் கொடுத்தால் டெங்கு காய்ச்சலை எளிதாக குணப்படுத்தலாம். டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச்சத்தை குறைத்துவிடும். உப்பு சேர்த்த கஞ்சி, இளநீர் மற்றும் ஆஸ்பத்திரியில் கொடுக்கப்படும் உயிர் காக்கும் ஓ.ஆர்.எஸ். போன்ற நீராகாரம் தேவையான அளவு கொடுக்க வேண்டும்.
ஏடிஸ் கொசு உருவாகும் தேவையற்ற பொருட்களை அகற்றிடுவோம். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒரு முறை பிளீச்சிங் பவுடர் கொண்டு நன்றாக தேய்த்து கழுவி கொசு புகாதவாறு மூடி வைப்போம். பகலிலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைப்போம் டெங்கு காய்ச்சலை தவிர்ப்போம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.