நெல்லை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு
நெல்லை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க புதிதாக ‘கவ் மில்க்' அறிமுகம் செய்து உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க புதிதாக 'கவ் மில்க்' அறிமுகம் செய்து உள்ளனர்.
பால் தட்டுப்பாடு
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவியது. அங்கு அமைச்சர்கள் ஆய்வு செய்து தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நெல்லை ரெட்டியார்பட்டியில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. பசுக்களை வளர்ப்போரிடம் இருந்து பால் கொள்முதல் செய்து, அதனை நிலைப்படுத்தப்பட்ட பால் மற்றும் பால் பொருட்களாக மாற்றி இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
காரணம் என்ன?
பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் நிர்வாகத்துக்கு கிடைக்கக்கூடிய பால் அளவு குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் நிலவும் வறட்சியும் பால் உற்பத்தி குறைவுக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தினமும் 85 ஆயிரம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. தற்போது முகவர்கள் மூலம் பொது மக்களுக்கு குறைந்த அளவே பால் வினியோகம் செய்யப்படுகிறது. பச்சை நிற பால் பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் வீடுகளுக்கு ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
இந்த தட்டுப்பாட்டை போக்க இன்று (புதன்கிழமை) முதல் 'கவ் மில்க்' என்ற பெயரில் புதிதாக பால் பாக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்படுகிறது. 'கவ் மில்க்' ½ லிட்டர் பாக்கெட் விலை ரூ.22.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.