திருச்செந்தூரில் ஆவணி திருவிழா:சுவாமி தங்க முத்துகிடா வாகனத்தில் வீதி உலா


திருச்செந்தூரில் ஆவணி திருவிழா:சுவாமி தங்க முத்துகிடா வாகனத்தில் வீதி உலா
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க முத்துகிடா வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவின் 3-ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துகிடா வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆவணி திருவிழா

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

3-ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் தீபாராதனை நடந்தது. காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் பூங்கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்ந்தனர்.

பின்னர் மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க முத்துகிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இன்று, சுவாமி வெள்ளி யானை வாகனத்தில் உலா

4-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி தங்க முத்துகிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.


Next Story