திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை ஆவணி திருவிழா கொடியேற்றம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை ஆவணி திருவிழா கொடியேற்றம்
x

இந்த ஆண்டு ஆவணி திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருச்செந்தூர்,

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு ஆவணி திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. பின்னர் அதிகாலை 5 மணிக்கு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

குடவருவாயில் தீபாராதனை, 5-ம் நாளான வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு மேலக்கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 7-ம் நாளான 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் உருகுசட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் பிள்ளையன்கட்டளை மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அன்று மாலையில் சுவாமி- அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.

8-ம் நாளான 11-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். மதியம் 12 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் நாளான 13-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story