அதிக குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும்-வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை
‘அதிக குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும்’ என்று தென்காசியில் நடந்த டிரைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்தார்.
'அதிக குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும்' என்று தென்காசியில் நடந்த டிரைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்தார்.
ஆலோசனை கூட்டம்
தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆட்டோக்களில் பள்ளி குழந்தைகளை அதிகமாக ஏற்றி செல்லக்கூடாது. புத்தகப்பைகளை ஆட்டோக்களின் ஓரங்களில் தொங்கவிடக் கூடாது. டிரைவரின் இருக்கையில் குழந்தைகளை அமர வைக்க கூடாது. ஒரு ஆட்டோவில் 6 குழந்தைகளை மட்டுமே ஏற்ற வேண்டும்.
இந்த விதிமுறைகளை மீறும் ஆட்டோக்கள் மற்றும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆட்டோவின் தகுதிச்சான்று, இன்சூரன்ஸ், டிரைவர் உரிமம் போன்றவை உரிய காலத்தில் புதுப்பிக்கப்பட்டு வைத்திருக்க வேண்டும்.
காப்பீட்டுத்தொகை
டிரைவர்கள் சீருடையில்தான் ஆட்டோக்களை ஓட்ட வேண்டும். இதுபோன்ற சான்றுகள் இல்லாமல் இருந்தால் விபத்து நிகழும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டுத்தொகை கிடைக்காது. எனவே உரிய சான்றுகள் இல்லாமல் ஆட்டோக்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும்.
பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் நலன் கருதி ஆட்டோ டிரைவர்கள் இதனை பின்பற்றி ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கனகவல்லி, மணிபாரதி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி, தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், பாவூர்சத்திரம் மற்றும் சுற்று வட்டார ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.