சாலை சந்திப்புகளில் தானியங்கி சிக்னல்கள்; சிவசேனா கட்சி கோரிக்கை
வாகன விபத்துகளை தவிர்க்க சாலை சந்திப்புகளில் தானியங்கி சிக்னல்கள் அமைக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குருஅய்யப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி-போடி சாலையில், புறவழிச்சாலை சந்திக்கும் 4 முனை சந்திப்பில் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கின்றன. சுங்கச்சாவடி மற்றும் இணைப்பு சாலைகள் உள்ள இடங்களில் விபத்து பகுதிகள் குறித்து அதிகாரிகள் கள ஆய்வு செய்து வாகன விபத்துகள் நேராமல் தடுக்க வழிவகை செய்திட வேண்டும். இங்கு தானியங்கி சிக்னல் நிறுவப்படாமல் இருப்பதே விபத்து ஏற்பட காரணமாக கருதப்படுகிறது.
தனியார் வாகனங்களுக்கு நிகராக அரசு பஸ்களும், பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் அதிவேகமாக இங்கு இயக்கப்படுகிறது. எனவே, இதுபோன்ற விபத்து அபாயம் நிறைந்த இடங்களில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதற்காக அந்தந்த சாலை சந்திப்புகளில் தானியங்கி சிக்னல் அமைக்க போலீஸ் துறையினரும், மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.