நாட்டிலேயே முதன் முறையாக சுரங்கப்பாதைக்கான கான்கிரீட் வளைவுகள் தானியங்கி முறையில் தயாரிப்பு- சென்னை மெட்ரோ
மெட்ரோ ரெயிலின் சுரங்கப்பாதைக்கு தேவையான கான்கிரீட் வளைவுகளை நாட்டிலேயே முதன் முறையாக தானியங்கி முறையில் தயாரிக்கும் அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டது.
கான்கிரீட் வளையங்கள்
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டத்தில் 3-வது வழித்தடத்தில் கெல்லிஸ் முதல் தரமணி வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்தபணியில் லார்சன் ஆண்டு டூப்ரோ நிறுவனம் ஒப்பந்தம் பெற்று பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த பணிக்கு சுரங்கம் தோண்டி முடித்த பின்னர் உள்ளே வைப்பதற்கு 18 ஆயிரம் கான்கிரீட் பிரிவு வளையங்கள் தேவைப்படுகிறது. அதில் 17 ஆயிரத்து 100 வளையங்கள் 1.4 மீட்டர் அகலமும், 900 வளையங்கள் 1.2 மீட்டர் அகலமும் கொண்டவையாகும். இவை இறுக்கமான வளைவு பகுதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
மனித வளம் குறைப்பு
வானகரத்தில் தொழிற்சாலை ஒன்றை கடந்த ஆண்டு மே மாதம் ஒப்பந்த நிறுவனம் அமைத்து கான்கிரீட் வளையங்களை தயாரித்து வருகிறது. இதுவரை 4 ஆயிரத்து 400 வளையங்களை உற்பத்தி செய்துள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு தனிப்பட்ட பார்கோடு மற்றும் ரேடியோ அதிர்வெண் குறிச்சொல்லைப் பிரிவின் உள்ளே எதிர்கால அடையாளம் மற்றும் கண்டறியும் தன்மைக்காக அமைக்கப்பட்டு உள்ளது.
அந்தவகையில் இந்த தொழிற்சாலையில் தானியங்கி கான்கிரீட் வினியோக அமைப்பை ஒப்பந்த நிறுவனம் நேற்று நிறுவியது. இதன் மூலம் எந்தவித போக்குவரத்தையும் பயன்படுத்தாமல், தானாக கொண்டு செல்வதால் உற்பத்தி திறன் அதிகரிப்பதுடன், மனித வளமும் குறைக்கப்படுகிறது.
நாட்டிலேயே முதன் முறை
அத்துடன் கார்பன் வெளியேற்றமும் குறைகிறது. இந்த அமைப்பை பின்லாந்தின் எலிமேடிக் ஓஒய்ஜெ நிறுவனம் வழங்கி உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக கடைபிடிப்பது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது என்று அதிகாரிகள் கூறினர்.
இந்த அமைப்பை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் தி.அர்ச்சுனன் தொடங்கி வைத்தார். பொது மேலாளர் ஆன்டோ ஜோஸ் (சுரங்கப்பாதை), ஒப்பந்த நிறுவனத்தின் திட்ட இயக்குனர் ஜெயராம் மற்றும் அலுவலகள் மற்றும் பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.