ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கக்கோரி வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கக்கோரி வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எஸ்.வி.ராமமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபரில் மாற்றியமைக்கப்பட்டது. அதன்பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விட்டது. ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. எரிபொருள் விலைக்கேற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்ய ஐகோர்ட்டு கடந்த ஏப்ரல் 6-ந்தேதி உத்தரவிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆட்டோ டிரைவர்கள் விருப்பம்போல கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கின்றனர். எனவே, எரிபொருள் விலைக்கேற்ப ஆட்டோ கட்டணத்தை மறுநிர்ணயம் செய்யவும், அதற்கேற்ப ஆட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு மீட்டர்களில் தானாகவே கட்டணம் மாறும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார். இதையடுத்து நீதிபதிகள், அரசு தரப்பில் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.