மோட்டார் சைக்கிள்கள் மீது ஆட்டோ மோதல்; பெண் உள்பட 2 பேர் சாவு
திருவேங்கடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது பால் ஆட்டோ மோதியதில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.
திருவேங்கடம்:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா பெருங்கோட்டூர் அருகே உள்ள நாரணாபுரத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 64). விவசாயியான இவரது மகள் கிருஷ்ணலட்சுமி (34). இவர் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்கள் 2 பேரும் நேற்று காலையில் சங்கரன்கோவிலில் இருந்து அ.கரிசல்குளம் கிராமத்தில் தனது உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ஜெகநாதன் ஓட்டினார்.
அதேபோல் திருவேங்கடம் அருகே உள்ள மருதாபுரியைச் சேர்ந்த பூ விவசாயிகளான அமுதா ராணி (35), உறவினரான கருப்பசாமி (48) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவில் பூ சந்தைக்கு பூக்களை விற்பதற்காக சென்று கொண்டிருந்தனர். 2 மோட்டார் சைக்கிள்களும் திருவேங்கடம் அருகே பெருங்கோட்டூர் அடுத்துள்ள பெரியகுளம் பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் அந்த வழியாக பால் ஏற்றிக் கொண்டு ஒரு ஆட்டோ வந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, ஜெகநாதன்- கிருஷ்ணலட்சுமி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் நிலைதடுமாறிய ஆட்டோ எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கருப்பசாமி-அமுதாராணியின் மீதும் மோதியதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஜெகநாதன், அமுதாராணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். கிருஷ்ணலட்சுமி, கருப்பசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவேங்கடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த கிருஷ்ணலட்சுமி மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், கருப்பசாமி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பலியான ஜெகநாதன், அமுதாராணி ஆகியோர் உடல்கள் பிரேத பரிேசாதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சக்திவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆட்டோ டிரைவர் சங்கரன்கோவில் அடுத்துள்ள பட்டத்தூர் பகுதியைச் சேர்ந்த அஜித்தை (24) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மோட்டார் சைக்கிள்கள் மீது பால் ஆட்டோ மோதியதில் விவசாயி உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.