சுகாதாரமற்ற உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்


சுகாதாரமற்ற உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகார், திருவெண்டுகாடு பகுதிகளில் சுகாதாரமற்ற உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

பூம்புகார், திருவெண்டுகாடு பகுதிகளில் சுகாதாரமற்ற உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துரித உணவுகள்

நவீன காலத்தில் உணவு முறைகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு வகையான துரித உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளது. சில நேரங்களில் இந்த உணவுகளை சாப்பிடும் போது உயிரிழப்புகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த உணவுகளில் ஒரு விதமான ரசாயம் கலந்த சுவை கூட்டக்கூடிய பொருட்களை கலப்பதால், ஒருமுறை இந்த உணவுகளை வாங்கி சாப்பிடும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதற்கு அடிமையாகி விடுகின்ற நிலை உள்ளது.

இதய நோய்

துரித உணவுகளால் நீரிழிவு நோய், இதய நோய், ரத்த கொதிப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டுள்ளன. இந்த உணவகங்கள் முறையான அனுமதி இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வருகின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில் திருவெண்காடு, மங்கை மடம், தர்மகுளம், பூம்புகார், வானகிரி உள்ளிட்ட இடங்களில் துரித உணவுகள் திடீரென திறக்கப்பட்டு பல்வேறு வகையான துரித உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த உணவகங்கள் முறையான அரசு அனுமதி பெற்று இயங்கவில்லை என தெரிகின்றன. மேலும் இங்கு தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமற்ற முறையில் காணப்படுகின்றது. அதோடு மட்டுமல்லாமல் பழைய இறைச்சிகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படுகின்றன.

ஆய்வு செய்ய வேண்டும்

தேவையானபோது உடனடியாக சூடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இதனால் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு உணவு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சுகாதாரமற்ற உணவகங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story