சேலம் வனத்துறை அலுவலகங்களில் தணிக்கை அதிகாரிகள் திடீர் ஆய்வு


சேலம் வனத்துறை அலுவலகங்களில் தணிக்கை அதிகாரிகள் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Sept 2022 1:45 AM IST (Updated: 9 Sept 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் உள்ள வனத்துறை அலுவலகங்களில் தணிக்கை அதிகாரிகள் திடீரென்று ஆய்வு செய்தனர்.

சேலம்

சேலத்தில் உள்ள வனத்துறை அலுவலகங்களில் தணிக்கை அதிகாரிகள் திடீரென்று ஆய்வு செய்தனர்.

வன உயிரியல் பூங்கா

சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு புள்ளிமான்கள், கடமான்கள், முதலைகள், குரங்குகள், மயில்கள் உள்ளிட்ட வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்கா மேம்பாட்டு பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் சென்னை வனத்துறையை சேர்ந்த தணிக்கை அதிகாரிகள் குழுவினர் நேற்று சேலம் வந்தனர். பின்னர் அவர்கள் சேலம் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குரும்பப்பட்டி பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

சோதனை

மேலும் என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?, ஒப்பந்தம் எடுத்தது யார்? என்பன உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினர். மேலும் அந்த குழுவினர் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கும் சென்று பார்வையிட்டதுடன் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரித்தனர். மேலும் மாவட்டத்தில் உள்ள வனத்துறை அலுவலகங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர்.

இத்குறித்து சேலம் மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி கூறும் போது, சேலம் வனக்கோட்டத்திற்குட்பட்ட வனத்துறை அலுவலகங்களில் சென்னை வனத்துறை தணிக்கை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதாவது பழைய ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.


Next Story