பரபரப்பை கிளப்பிய பகீர் ஆடியோ..! மனைவியால் ஜெமினி கணேசனின் பேரனுக்கு வந்த சோதனை
அபர்ணா மீது மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் மஞ்சு. இதன் அடிப்படையில் அபர்ணா, நண்பர் அஜய் மீது மோசடி, போலியான ஆவணம் உருவாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை
சென்னையில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு சீட் வாங்கித்தருவதாக கூறி, 5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நடிகர் ஜெமினி கணேசனின் பேரனும், பிக்பாஸ் பிரபலமுமான அபிநய்யின் மனைவியைத் தேடி வருகின்றனர்.
சென்னை மாம்பலம் ஆற்காடு சாலையை சேர்ந்தவர் மஞ்சு, ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு ஆடைகளை வடிவமைத்து கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் பிக்பாஸ் பிரபலமான நடிகர் அபிநய் என்பவரின் மனைவி அபர்ணா வைத்திருக்கும் ஜவுளிகடைக்கு, மஞ்சு ஆடைகளை வடிவமைத்து சப்ளை செய்து வந்துள்ளார்.
அபிநய், நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் என்பதால், மிகுந்த மரியாதையோடு அபர்ணா குடும்பத்தினருடன் பழகி உள்ளார் மஞ்சு. இந்நிலையில் கடந்த ஆண்டு மஞ்சுவின் மகள் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவர் விரும்பக்கூடிய கல்லூரி கிடைக்காத விஷயத்தை கேள்விப்பட்ட அபர்ணா, பிரபல மருத்துவக் கல்லூரியில் தனக்கு தெரிந்த நண்பர் இருப்பதாகவும், 20 லட்ச ரூபாய் கொடுத்தால் மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கி விடலாம் என்றும் மஞ்சுவிடம் கூறியிருக்கிறார்.
முதற்கட்டமாக 5 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து மருத்துவ சீட்டை புக் செய்து ரசீதை பெற்றுக் கொள்ளலாம் என அபர்ணா கூறியுள்ளார். மீதி பணத்தை கல்லூரியில் சேர்ந்த பின்பு செலுத்திக்கொள்ளலாம் எனவும் கூறி இருக்கிறார்.
இதனை நம்பிய மஞ்சு கடந்த ஜனவரி மாதம் 5 லட்சம் ரூபாயை, அவர் கூறியபடி, அபர்ணாவின் நண்பரான அஜய்யின் வங்கிக்கணக்கிற்கு செலுத்தியிருக்கிறார். பணத்தை பெற்றுக்கொண்ட அபர்ணா, ஐந்து நாட்கள் கழித்து வாட்ஸ் அப்பில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டதாக கூறி சான்றிதழ் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.
சான்றிதழை எடுத்துக்கொண்டு அந்த மருத்துவக் கல்லூரிக்கு சென்று, மகளை சேர்ப்பதற்காக மஞ்சு சென்றுள்ளார். அது போலியான சான்றிதழ் என்று கல்லூரி நிர்வாகத்தினர் மஞ்சுவிடம் கூறியுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, கொடுத்த பணத்தை கேட்டு அபர்ணா வைத்திருக்கும் நவீன ஆடையகம் சென்றுள்ளார்.
அப்போது 5 லட்ச ரூபாய் பணத்தை தனது நண்பரின் வங்கிக் கணக்கிற்குதான் அனுப்பியதாகவும், தனது நண்பரிடம் சென்று வாங்கிக்கொள்ளுமாறு கூறி அலைக்கழித்துள்ளார். ஒரு கட்டத்தில் அபர்ணா கடையை மூடிவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து அபர்ணா மீது மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் மஞ்சு. இதன் அடிப்படையில் அபர்ணா, நண்பர் அஜய் மீது மோசடி, போலியான ஆவணம் உருவாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோன்று அபர்ணா எவ்வளவு பேரிடம் மோசடி செய்துள்ளார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் மாம்பலம் போலீசார், அவரை கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர்.