பறிமுதல் செய்யப்பட்ட 38 வாகனங்கள் ஏலம்
பறிமுதல் செய்யப்பட்ட 38 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
வரி கட்டாதது மற்றும் இதர குற்றங்களுக்காக போக்குவரத்துத்துறை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு 38 வாகனங்களை வாகன உரிமையாளர்கள் நீண்டகாலமாக உரிய முறைப்படி பெற்று செல்லாமல், சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை தற்போது உள்ள நிலையிலேயே போக்குவரத்து ஆணையரின் சுற்றறிக்கைகளின்படி, பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் ரூ.10,000-க்கான வங்கி வரையோலையினை வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகங்கை என்ற பெயாில் சிவகங்கையில் செலுத்தத்தக்கதாக எடுத்து, வரையோலையின் பின்புறம் மனுதாரா் தொடா்பான விபரங்களை குறிப்பிட்டு, மனுவுடன் இணைத்து சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் கொடுக்கலாம். ஏலம் விடப்பட உள்ள வாகனங்கள் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாகனங்களை 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பார்வையிடலாம். 20-ந் தேதி காலை 11 மணியளவில் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஏலம் நடைபெறுகிறது. மேலும், ஏலம் எடுப்பவர்கள் வாகனங்களுக்கான ஏலத்தொகையினை 18 சதவீத விற்பனை வரியுடன் சோ்த்து 20.9.2022 அன்று உடன் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.