இறுதி சடங்கு ஊர்வலம் சென்ற போது மரியாதை செலுத்திய ஏட்டு
போலீஸ் நிலையம் வழியாக இறுதி சடங்கு ஊர்வலம் சென்ற போது ஏட்டு மரியாதை செலுத்தினார்.
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். அதாவது துப்பாக்கி வைத்து பணியில் ஈடுபடும் போது அதனை உரிய முறையப்படி வைத்து வணக்கம் செலுத்துவார்கள். அதேபோல போலீஸ் நிலையம் வழியாக இறந்தவர்களின் உடல்கள் எடுத்து செல்லப்பட்டால் போலீஸ் நிலையத்தில் நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் மரியாதை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதனை பெரிய அளவில் யாரும் கடைப்பிடிப்பதில்லை எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் முன்பாக நேற்று இறந்தவரின் உடல் இறுதி சடங்கில் ஊர்வலமாக கொண்டு சென்றிருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு செல்வராஜ் என்பவர் துப்பாக்கியை உயர்த்தி பிடித்து உரிய மரியாதை செலுத்தினார். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. அதே நேரத்தில் அங்கு பணியில் இருந்த போலீசாரும் அதனை புகைப்படம் எடுத்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ''இறந்தவர்களின் உடல்கள் போலீஸ் நிலையம் வழியாக கொண்டு செல்லப்பட்டால் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் மரியாதை செலுத்த வேண்டும் என உத்தரவு உள்ளது. ஆனால் இதனை கடைப்பிடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரியவில்லை. எதேச்சையாக போலீஸ் நிலையம் வழியாக இறுதி ஊர்வலம் சென்ற போது பணியில் இருந்த போலீசார் மரியாதை செலுத்தி தனது கடமையாற்றினார்'' என்றனர். அவரை அங்கிருந்த போலீசார் பாராட்டினர்.