'அரசு மருத்துவமனையில் பணியாற்ற மறுக்கும் மருத்துவர்களின் அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல' - ஐகோர்ட்டு அதிருப்தி


அரசு மருத்துவமனையில் பணியாற்ற மறுக்கும் மருத்துவர்களின் அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல - ஐகோர்ட்டு அதிருப்தி
x

அரசு மருத்துவமனையில் பணியாற்ற மறுக்கும் மருத்துவர்களின் அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல என ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை,


மருத்துவ மேற்படிப்பில் சேரக்கூடிய மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும். இது தொடர்பாக உத்தரவாத பத்திரத்தையும் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் எழுதிக் கொடுக்க வேண்டும்.


இந்த நிலையில் மருத்துவ மேற்படிப்பு முடித்து அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 3 பேர், கொரோனா காலத்தில் தாங்கள் ஆற்றிய பணியையும் கருத்தில் கொண்டு தங்களுடைய பயிற்சி காலத்தை குறைக்க வேண்டும் என்றும், சான்றிதழ்களை திரும்பித் தர உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.


இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் தொடர்பான பல்வேறு வழக்குகளை ஏற்கனவே ஐகோர்ட்டு பரிசீலித்துள்ளது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் கொரோனா காலம் என்பது அவசர காலம் என்றும், அந்த சமயத்தில் கொரோனா சிகிச்சை பணிகளை மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருந்தவர்களும் மேற்கொண்டதாகவும், இவர்களுக்கு சலுகை வழங்குவதாக அரசு எப்போதும் தெரிவிக்கவில்லை எனவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.


இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மருத்துவ மேற்படிப்பில் சேரும்போதே நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு உத்தரவாத பத்திரத்தில் கையெழுத்திட்ட காரணத்தால், பயிற்சி காலத்தை குறைக்க வேண்டும் என்ற சலுகையை கேட்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் நியமன உத்தரவின்படி பயிற்சி காலத்தை மனுதாரர்கள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதி இந்த மனுவை தள்ளுபடி செய்தார்.


அதோடு இது போன்ற சிறப்பு நிபுணத்துவ படிப்புகளை படிக்கக் கூடிய மருத்துவ மாணவர்களுக்கு அரசு பெரும் தொகையை செலவிடுவதாகவும், அவர்கள் அரசு மருத்துவமனையில் பணியாற்ற மறுப்பது என்பது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக்கூடிய ஏழை மக்களின் அடிப்படை உரிமையை பாதிக்கும் செயல் எனவும், மருத்துவர்களின் இந்த அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல என்றும் நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.










Next Story