ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்


ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்
x

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்கும் ஓ.என்.ஜி.சி-யின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

ஹைட்ரோ கார்பன் எனும் எரிகாற்று எடுக்கும் திட்டத்திற்கெதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்ப்பைத் தெரிவித்து, அதனை தமிழ்நாடு அரசும் ஏற்று அத்திட்டத்தைக் கைவிடுவதற்கு கொள்கை முடிவு எடுத்திருக்கும் நிலையில், அதனை அலட்சியப்படுத்தி மாநில அரசைத் துளியும் மதியாது இந்திய மத்திய பாஜக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மீண்டும் தமிழ்நாட்டில் செயல்படுத்த முனைவது அதிர்ச்சியளிக்கிறது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசின் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் மாநில சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதிகேட்டு விண்ணப்பித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மாநில அரசின் தன்னுரிமைக்கும், மக்களின் மண்ணுரிமைக்கும் மதிப்பளிக்காது எதேச்சதிகாரப்போக்கோடு தமிழ்நாட்டின் மீது நிலவியல் போரைத் தொடுக்க முயலும் இந்திய மத்திய அரசின் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கெதிரான கொடும்போக்காகும்.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் 1984-ம் ஆண்டிலிருந்து ஒ.என்.ஜி.சி நிறுவனம் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய்க்கிணறுகளை அமைத்து வருகிறது. 1984 ஆம் ஆண்டிலிருந்து, தற்போதுவரை மொத்தமாக 768 கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இராமநாதபுரத்தில் உள்ள 35 எண்ணெய்க் கிணறுகள் உட்பட 187 கிணறுகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. மேலும், புதிதாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் வேதாந்தா நிறுவனம் 274 கிணறுகளும், ஓ.என்.ஜி.சி 215 கிணறுகளும் என மொத்தமாக 489 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்காக ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களிலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களிலும் புதிதாக ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்திருப்பது தமிழ்நாட்டை மெல்ல மெல்ல பாலைவனமாக மாற்றும் சூழ்ச்சியேயாகும்.

அரசு அறிவித்துள்ள கொள்கையின்படி, ஏற்கனவே மூடப்பட்ட கிணறுகள் மற்றும் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் கிணறுகள் உட்பட அனைத்து கிணறுகளும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்தான். இப்போது எண்ணெய்க்கிணறுகளாக இருக்கும் கிணறுகளில்கூட, நாளை நீரியல் விரிசல் (Hydraulic fracking) முறைப்படி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ள முடியும். இந்தப் புதிய கிணறுகளுடன் சேர்த்து ஏற்கெனவே இருக்கும் 768 கிணறுகளையும் தடையின்றிச் செயல்பட அனுமதிப்பதுதான் அரசின் திட்டமென்றால் அது தமிழ்நாட்டினைப் பேரழிவுக்கே இட்டுச்செல்லும்.

வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை அழிக்க நினைக்கும் மத்திய அரசின் பேரழிவுத் திட்டங்களை தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் அனுமதிக்கக்கூடாது. மண்ணின் வளத்தைப் பாதிக்கக்கூடிய இந்திய மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக வெறுமனே கடிதம் மட்டும் எழுதாமல், நாடாளுமன்றத்தில் தங்களுக்குள்ள எண்ணிக்கைப் பலத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி ஆளும் திமுக அரசு உறுதியான அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்தை மேற்கொண்டு அவற்றைத் திரும்பப்பெறச் செய்யவேண்டும்.

ஆகவே, இராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பத்தை உடனடியாக தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story