பிளேடால் வெட்டி தற்கொலை முயற்சி: கமிஷனர் அலுவலகத்தை கலக்கிய வாலிபர்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாலிபர் ஒருவர், பிளேடால் உடல் முழுக்க வெட்டி தற்கொலைக்கு முயன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னை சித்தாலபாக்கத்தைச் சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் ஆனஸ்ட்ராஜ் (வயது 29). அவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் கோழிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். திருந்தி வாழ்வதாக அறிவித்துள்ள அவர், நேற்று காலை தனது மனைவி விஜயாவுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார்.
திடீரென்று அவர் தான் மறைத்து வைத்திருந்த பிளேடு மற்றும் பேனா கத்தியால் உடம்பு முழுவதும் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த பெண் போலீசார், வெட்டுவதை தடுத்து அவரை காப்பாற்ற முயன்றனர். அவர்களையும் வெட்டி விடுவதாக மிரட்டினார்.
அவர் கஞ்சா போதையில் இருந்ததாக தெரிகிறது. கமிஷனர் அலுவலக வளாகத்தில் அங்கும், இங்கும் ஓடியபடி இருந்தார்.
அடிக்காமல், பிடிக்காமல் போலீசார் சமாதானம் செய்ய முயன்றனர். இறுதியில் வேப்பேரி போலீஸ்காரர் ஒருவர், துணிச்சலாக வாலிபர் ஆனஸ்ட்ராஜை மடக்கி, அவர் கையில் வைத்திருந்த பிளேடையும், கத்தியையும் பிடுங்கினார்.
தனது அண்ணன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை பார்க்கச்சென்ற போது, அங்கு காவலுக்கு இருந்த போலீசார் தன்னை தாக்கி, பணத்தை பறித்துக்கொண்டதாகவும், அந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த வாலிபர் தொடர்ந்து அடம் பிடித்தார்.
கமிஷனர் அலுவலகத்தை சுமார் 2 மணி நேரம் கலக்கியபடி இருந்த ஆனஸ்ட்ராஜிடம், இறுதியில் வேப்பேரி உதவி போலீஸ் கமிஷனர் அரிக்குமார் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தி, ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி அழைத்து சென்றார். பின்னர் அந்த வாலிபர் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று காலை முதல் பகல்வரை போலீஸ் கமிஷனர் அலுவலகம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.