செம்மண் கடத்தலை தடுத்த வருவாய் ஆய்வாளர் கல்லால் தாக்கி கொலை செய்ய முயற்சி - 4 பேர் கைது
செம்மண் கடத்தலை தடுத்த வருவாய் ஆய்வாளரை கல்லால் தாக்கி கொலை செய்ய முயற்சி செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பிரபாகரன் (வயது 36). இவரது கட்டுப்பாட்டில் துறையூர், நரசிங்கபுரம் உள்பட 16 வருவாய் கிராமங்கள் செயல்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் நரசிங்கபுரம் கிராமத்தில் செம்மண் கடத்தப்படுவதாக துறையூர் தாசில்தார் வனஜாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர், இதுபற்றி வருவாய் ஆய்வாளர் பிரபாகரனுக்கு தகவல் கொடுத்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வருவாய் ஆய்வாளர் விரைந்து சென்றார். அப்போது பச்சமலை அடிவாரத்தில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் சிலர் பொக்லைன் எந்திரத்தை கொண்டு செம்மண்ணை அள்ளிக்கொண்டிருந்தனர்.
இதைக்கண்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், உடனடியாக அவர்களை தடுத்து பொக்லைன் எந்திரத்தின் சாவியை எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்கு புறப்பட்டார். அப்போது, அங்கு மண் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் வருவாய் ஆய்வாளரை வழிமறித்தனர். மேலும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அங்கு கிடந்த கருங்கல்லை எடுத்து வருவாய் ஆய்வாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். அதில் ஒருவர் பிரபாகரனின் கழுத்தில் கடித்துள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதில் பிரபாகரனுக்கு தலை, கை, கால், கழுத்து உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் ரத்தம் சொட்டச்சொட்ட இருந்த அவரை அந்தவழியாக வந்தவர்கள் மீட்டு பெருமாள்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், செம்மண் கடத்தலை தடுத்ததால், ஆத்திரம் அடைந்த நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.க. பிரமுகருமான மகேஸ்வரன் (48), அதே பகுதியை சேர்ந்த பொக்லைன் எந்திர டிரைவரும், அரசு விரைவு போக்குவரத்துக்கழக டிரைவருமான தனபால் (48), ராமகிருஷ்ணன் மகன் மணி என்ற மணிகண்டன் (26), கீழகுன்னுப்பட்டியை சேர்ந்த கணபதியின் மகன் கந்தசாமி (35) ஆகியோர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை வழிமறித்து, தாக்கி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின்பேரில் தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல், வழிமறித்தல், கொலை முயற்சி செய்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் மகேஸ்வரன், தனபால், மணிகண்டன், கந்தசாமி ஆகிய 4 பேர் மீதும் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். இச்சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.