அரசு ஆஸ்பத்திரியில் கொலை முயற்சி சம்பவம்-திண்டுக்கல்லை சேர்ந்த பெண் உள்பட 6 பேரிடம் போலீசார் விசாரணை
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 2 கைதிகளை கொல்ல முயன்ற கும்பலை தனிப்படை போலீசார் தேடி வரும் நிலையில் இது தொடர்பாக 6 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 2 கைதிகளை கொல்ல முயன்ற கும்பலை தனிப்படை போலீசார் தேடி வரும் நிலையில் இது தொடர்பாக 6 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கொலை முயற்சி
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த திண்டுக்கல் வேடப்பட்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி கொலை வழக்கில் தொடர்புடைய யுவராஜ் குமார் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் பழிக்கு பழியாக கொலை செய்ய முயன்றதாக யுவராஜ்குமார் புகாரின் பேரில் வேடப்பட்டி அபிராமி நகரை சேர்ந்த போத்திராஜ் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இந்த கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க 4 போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணை
இந்நிலையில் தனிப்படை போலீசார் வேடப்பட்டியை சேர்ந்த குமார், பாண்டியம்மாள் உள்பட 6 பேரை விசாரணைக்கு அழைத்து வந்தனர். விசாரணை முடிந்து அவர்களிடம் வாக்குமூலம் பெற்று அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.
எனினும் அரசு ஆஸ்பத்திரியில் சம்பவம் நடந்த பொது வார்டில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை தொடர்ந்து தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.