கருங்கல் அருகே கொத்தனார் வீட்டில் கதவை உடைத்து கொள்ளை முயற்சி


கருங்கல் அருகே கொத்தனார் வீட்டில் கதவை உடைத்து கொள்ளை முயற்சி
x

கருங்கல் அருகே கொத்தனார் வீட்டில் மர்ம நபர்கள் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கல் அருகே கொத்தனார் வீட்டில் மர்ம நபர்கள் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொத்தனார்

கருங்கல் அருகே உள்ள மாங்கரை இடையன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது55), கொத்தனார். இவர் நேற்று முன்தினம் மாலையில் அருகில் உள்ள ஒரு வீட்டில் நடந்த புது நன்மை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். இவருடைய மனைவி முள்ளங்கினாவிளை பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றார்.

இவர்கள் இருவரும் வீட்டில் இருந்து வெளியே செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் மாடி கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது விஜயகுமார் திடீரென வீட்டுக்கு திரும்ப வந்தார். இதனால் சத்தம் கேட்டு கொள்ளையர்கள் வேகமாக தப்பி சென்றனர்.

மோப்ப நாய் சோதனை

வீட்டில் வந்த விஜயகுமார் கதவு உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அறையில் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் தாறுமாறாக வீசப்பட்டு கிடந்தன. அதிர்ஷ்டவசமாக பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை.

இதுகுறித்து விஜயகுமார் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்பநாய் வீட்டில் இருந்து அருகில் சென்ட்ரிங் வேலை நடக்கும் ஒரு வீடு வரை சென்று விட்டு திரும்பியது. இதனால் இங்கிருந்து கதவுகளை உடைப்பதற்கு கம்பி எடுத்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

ேநாயால் படுத்திருந்த தாயார்

திருட்டு முயற்சியின் போது வீட்டின் உள்ளே கட்டிலில் விஜயகுமாரின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரால் சத்தம் போட முடியவில்லை. அவர் போலீசாரிடம் கூறும்போது, 3 நபர்கள் வீட்டின் மேல் மாடி கதவை உடைத்து உள்ளே புகுந்ததாகவும், விஜயகுமார் வரும் சத்தம் கேட்டதும் தப்பி ஓடியதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

கொத்தனார் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story