பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் தீக்குளிக்க முயற்சி
பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லாததால் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பலூர்
மண்எண்ணெய்யை ஊற்றி...
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க பெண் ஒருவருடன் வந்திருந்த முதியவர் ஒருவர் திடீரென்று பாட்டிலில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று, அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறித்து, தீப்பெட்டியை பிடுங்கி அவரை காப்பாற்றினர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கடன் தொல்லை
விசாரணையில், அவர் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, கூத்தூரை சேர்ந்தவரும், ஓய்வு பெற்ற பெல் ஊழியருமான சாமிநாதன் (வயது 69) என்பது தெரியவந்தது. அவருடன் வந்திருந்தது அவரது மனைவி செல்வாம்பாள் (60) என்பது தெரியவந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகன், மகளுக்கு திருமணமாகி விட்டதாம். தற்போது சாமிநாதன் ராமலிங்கபுரத்தில் தனது மனைவியுடன் வசித்து வருகிறாராம். இந்த நிலையில் கடன் தொல்லையால் சாமிநாதன் நிலத்தினை விற்பனை செய்வதற்கு, நிலத்தை பாகப்பிரிவினை செய்து தருமாறு தனது அண்ணன்களிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர்கள் நிலத்தை பாகப்பிரிவினை செய்து கொடுக்க முன்வரவில்லையாம். மேலும் அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் சேர்ந்து சாமிநாதனையும், அவரது மனைவியையும் அடித்தும், தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனராம்.
பரபரப்பு
இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை பாகப்பிரிவினை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாமிநாதன் குன்னம் போலீசாரிடமும், கலெக்டர் அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுத்தபாடில்லையாம். இதனால் மனமுடைந்த சாமிநாதன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக தனது மனைவியுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவும் வந்து அவரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரிடம் அறிவுறுத்தி விட்டு சென்றார். ஏற்கனவே சாமிநாதன் இதே பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1-ந் தேதி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்த அன்று தீக்குளிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது. சாமிநாதன் 2-வது முறையாக தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.