கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை,
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் சோதனை
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கிறது. அதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து கலெக்டரிடம் மனு அளிப்பார்கள். இந்த கூட்டத்திற்கு வருபவர்கள் தீக்குளிப்பு முயற்சிகளில் ஈடுபடுவதால் கலெக்டர் அலுவலகத்தில் முன்பக்க 2 நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டு மீதமுள்ள ஒரு நுழைவு வாயில் மட்டுமே திறக்கப்படும். மேலும் அங்கும் போலீசாரின் சோதனைக்கு பின்பே பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
வழக்கம் போல் நேற்று பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடந்தது. போலீசார் நுழைவுவாயிலில் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் மண்எண்ணெய் கேனை பையில் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்தார். அதனை போலீசார் கண்டுபிடித்து அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண், சந்தைப்பேட்டையை சேர்ந்த பாண்டிச்செல்வி என்பதும், கணவர் தனது குழந்தையை தூக்கி சென்று விட்டதால் மனமுடைந்து தீக்குளிக்க வந்ததாக தெரிந்தது.
நிலம் அபகரிப்பு
அதே போல் முதியவர் ஒருவர் போலீசாரின் சோதனையில் இருந்து தப்பி மண்எண்ணெய் கேனை கலெக்டர் அலுவலகத்திற்குள் கொண்டு வந்து விட்டார். அவர் வளாகத்திற்குள் திடீரென்று மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். ஆனால் அங்கிருந்த பொதுமக்களும், போலீசாரும் விரைந்து செயல்பட்டு அவரிடம் இருந்து தீப்பெட்டி மற்றும் மண்எண்ணெய் கேனை பறித்தனர். பின்னர் அவர் மீது தண்ணீர் ஊற்றினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கரிமேடு மோதிலால் தெருவை சேர்ந்த சுப்பையா (வயது68) என தெரிந்தது. அவர் தனது இடத்தை தி.மு.க. பிரமுகர் ஒருவர் அபகரித்து விட்டார். இது குறித்து போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே வேறு வழியில்லாமல் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.