புதிய வீடுகள் கட்டி தரக்கோரி மறியலுக்கு முயற்சி
புதிய வீடுகள் கட்டி தரக்கோரி மறியல் முயற்சி நடந்தது.
தொண்டி,
திருவாடானை ஊராட்சி சமத்துவபுரம் அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் வசித்து வரும் 188 நபர்களுக்கு அரசு, வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளது. இதில் 36 குடும்பங்களுக்கு கடந்த 1999-ம் ஆண்டு வீடுகள் கட்டி கொடுத்தது. தற்போது அந்த வீடுகள் சேதமடைந்து விட்டது. எனவே, வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் தங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர கோரி நரிக்குறவர் சமுதாய மக்கள் நேற்று பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரமோகன், இது தொடர்பாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புதிய வீடுகள் கேட்டவர்களுக்கான பயனாளிகள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரசு அனுமதி வரப்பட்டவுடன் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். பேச்சுவார்த்தையின் போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன், திருவாடானை ஊராட்சி தலைவர் இலக்கியா ராமு, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி செங்கை ராஜன், கிராம நிர்வாக அலுவலர் நாகேந்திரன், நரிக்குறவர் சமுதாய பிரதிநிதிகள் மாவட்ட துணை தலைவர் செல்வம், ரகு, சுந்தரபாண்டி, மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.