கூலிப்படையுடன் சேர்ந்து மனைவியை கொல்ல முயற்சி


கூலிப்படையுடன் சேர்ந்து மனைவியை கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க திட்டம் போட்ட தொழிலாளி, கூலிப்படையுடன் சேர்ந்து மனைவியை கொல்ல முயன்றார். இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க திட்டம் போட்ட தொழிலாளி, கூலிப்படையுடன் சேர்ந்து மனைவியை கொல்ல முயன்றார். இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளத்தொடர்பு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மல்லப்பட்டி அருகே போயர்சாலையை சேர்ந்தவர் வடிவேல் (வயது 40). கல் உடைக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி மாது (36). வடிவேலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மாது ஊரில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்த நிலையில் மதகேரியை சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவருடன் வடிவேலுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த மாது கணவனை கண்டித்துள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

கொல்ல முயற்சி

வடிவேல் அடிக்கடி தனது மனைவியிடம் தகராறு செய்து பணத்தை பறித்து சென்று வந்துள்ளார். இதற்கிடையே மாது, சிறுக சிறுக சேமித்து வைத்திருக்கும் பணத்தை அபகரிக்க வடிவேல் திட்டமிட்டார். மனைவியை கொன்று விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கலாம் என வடிவேல் திட்டம் போட்டார்.

இதற்காக அவர் தனது மனைவியிடம் கடந்த சில நாட்களாக அன்பாக பேசி வந்துள்ளார். கணவரின் சூழ்ச்சியை அறியாத மாதுவும் தனது கணவர் திருந்தி விட்டார் என நம்பினார். நேற்று வடிவேல் தனது மனைவியை ராயக்கோட்டைக்கு வருமாறும், அங்கு உனக்கு நகை வாங்கி தருகிறேன் என கூறினார். மேலும் உன்னிடம் இருக்கும் பணத்தையும் எடுத்து வருமாறு கூறினார்.

பணத்துடன் சென்றார்

இதை நம்பி மாது, தான் சேர்த்து வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு பஸ்சில் ராயக்கோட்டைக்கு சென்றார். அப்போது மனைவியிடம் செல்போனில் பேசிய வடிவேல், நீ உடையாண்டஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே இறங்கி விடு. அங்கு கார் வைத்திருக்கிறேன். உன்னை அழைத்து செல்கிறேன் என கூறினார்.

இதை நம்பி மாதுவும் உடையாண்டஅள்ளியில் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது வடிவேல் தனது கூட்டாளிகள் 8 பேருடன் 2 கார்களில் அங்கு காத்திருந்தார். அவர்கள் மாதுவிடம் நீ வைத்திருக்கும் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் மாது பணத்தை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அவர்கள் பணத்தை பறித்து கொண்டு மாதுவை கொலை செய்ய முயன்றனர்.

8 பேர் கைது

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதையடுத்து வடிவேல் உள்பட 9 பேரும் 2 கார்களில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து மாது தனது உறவினர்கள் உதவியுடன் ராயக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் கார் எண்களை வைத்து வடிவேல் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடினர்.

அப்போது அவர்கள் நாகமங்கலம் அருகே ஊடேதுர்க்கம் காப்புகாடு பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று வடிவேல் உள்ளிட்டவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் ஒருவர் தப்பியோடி விட்டார். 8 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆயுதங்கள் பறிமுதல்

அப்போது அவர்கள் மாதுவின் கணவர் வடிவேல், எச்செட்டிப்பள்ளி ரமேஷ் (40), கவுதாளம் ஜேம்ஸ் (30), கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் (30), வெள்ளிச்சந்தை காமராஜ் நகர் சந்திரசேகர் (32), போயர் சாலையை சேர்ந்த ராம்ராஜ் (31), ஈஸ்வரன் (38), தண்டுகாரனள்ளியை சேர்ந்த விஜயகாந்த் (28) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேல் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து 2 கார்கள், 2 கத்தி, 2 அரிவாள், உருட்டு கட்டை, ரூ.50 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story