அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: லஞ்ச ஒழிப்பு அதிகாரி போல் நடித்த மோசடி நபர் கைது - வட்டி தொழில் நஷ்டம் அடைந்ததால் கைவரிசை
அரசு அதிகாரிகளின் அலுவலகங்களில் சோதனை செய்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார்.
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் அசோகன். இவர், தரமணியில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று கூறி சந்தேகம் அளிக்கும் வகையில் மர்ம நபர் ஒருவர் அலுவலகத்திலும், வீட்டிலும் சோதனை நடத்தியதாக தரமணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல் கோயம்பேட்டில் உள்ள சி.எம்.டி.ஏ. அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றும் ராஜன்பாபு என்பவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் என கூறி அவரது வீட்டில் மர்ம நபர் சோதனை நடத்தியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் பேரில், தரமணி போலீஸ் உதவி கமிஷனர் ஜீவானந்தம், தரமணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் அரசு அதிகாரிகளை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற மர்மநபரின் புகைப்படத்தை கண்காணிப்பு கேமிராவில் பதிவை வைத்து தேடினர். அப்போது தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த சின்னையன் (வயது 53) என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் வட்டிக்கு பணம் தரும் தொழில் செய்து வந்ததும், கொரோனாவிற்கு பின் தொழில் நஷ்டம் அடைந்ததால் லஞ்ச ஒழிப்பு அதிகாரி போல் நடித்து மோசடி செய்து அரசு அதிகாரிகளிடம் பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சின்னையனை கைது செய்த போலீசார் வேறு எங்கேயேனும் கைவரிசை காட்டி உள்ளாரா? என விசாரித்து வருகின்றனர்.