தி.மு.க. எம்.பி., ஆ.ராசாவின் உருவபொம்மையை எரிக்க முயற்சி
தி.மு.க. எம்.பி., ஆ.ராசாவின் உருவபொம்மையை எரிக்க முயன்ற சிவசேனா கட்சியினர் 35 பேர் கைது
தி.மு.க. எம்.பி.யான ஆ.ராசா இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக பா.ஜனதா, சிவசேனா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் ஆ.ராசாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் போராட்டமும் நடந்தது. திண்டுக்கல்லில், கிழக்கு மாவட்ட பா.ஜனதா கட்சியினர், ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்தநிலையில் ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவருடைய உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தப்போவதாக சிவசேனா கட்சியினர் அறிவித்தனர். இதற்காக மாநில அமைப்பாளர் சி.கே.பாலாஜி தலைமையில் இளைஞர் அணி மாநில செயலாளர் தமிழ்செல்வன், தலைவர் திருமுருக தினேஷ், மாவட்ட தலைவர்கள் கனிவளவன், நாகபாண்டி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் தன்வீக்அர்ஜூன் உள்ளிட்டோர் நேற்று திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு திரண்டனர்.
இதையடுத்து ஆ.ராசாவை கண்டித்து கோஷமிட்டபடி அவருடைய உருவபொம்மையை சிவசேனா கட்சியினர் எரிக்க முயன்றனர். அதற்குள் போலீசார் துரிதமாக செயல்பட்டு உருவபொம்மையை பறித்தனர். அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் உருவபொம்மையை எரிக்க முயன்ற நிர்வாகிகள் உள்பட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.