குடிபோதையில் சத்தம் போட்டவர்களை தட்டிக்கேட்ட தொழிலாளிக்கு வெட்டு
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது குடிபோதையில் சத்தம் போட்டவர்களை தட்டிக்கேட்ட தொழிலாளியை கத்தியால் வெட்டிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தொழிலாளிக்கு வெட்டு
சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 20-வது தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 54). இவர், கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டின் அருகே சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்த 2 பேர், குடிபோதையில் அந்த சாலையில் சத்தம் போட்டபடி வந்தனர். அவர்களை நடராஜன் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள், தங்களிடம் இருந்த கத்தியால் நடராஜனின் தலையில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த நடராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடராஜன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
பீர் பாட்டில் வீச்சு
அதேபோல் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், செந்தூர்புரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (36). நேற்று முன்தினம் இரவு வாலிபர்கள் சிலர் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக இவரது வீட்டின் அருகே அமர்ந்து மது அருந்தி, ரகளையில் ஈடுபட்டனர். இதனை கார்த்திகேயன் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், கார்த்திகேயனை கத்தியால் வெட்ட முயன்றனர். அதனை அவர் கட்டையால் தடுத்தார். உடனே வாலிபர்கள் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை அவர் மீது வீசி எறிந்தனர். இதில்் கார்த்திக் காயம் அடைந்தார். பின்னர் அந்த வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்த புகாரின்பேரில் பூந்தமல்லி போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர்களின் உருவங்களை வைத்து காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சோமநாதன் (20), அஜித்குமார் (23), அஜித் (21), ஸ்ரீதர் (20), சாமுவேல் (19), செல்வராஜ் (20) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.