கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் மீது தாக்குதல்
கடையநல்லூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள போகநல்லூர் கிராமம் தேவர் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 27). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தங்கராஜ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தற்போது விடுமுறைக்காக ஊர் திரும்பிய தங்கராஜ் மனைவியுடன் குடும்பம் நடத்தாமல் கடையநல்லூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். மேலும் அவருக்கு, திருமணமான வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் காலையில் தங்கராஜ் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி அருகே டீக்கடையில் டீக்குடித்து கொண்டு இருந்தார். அப்போது, அங்கு 5 பேர் வந்தனர். அவர்கள் திடீரென்று தங்கராஜை கம்பால் சரமாரியாக தாக்கினர். டீக்கடையில் இருந்த பாலை கொட்டியதுடன் சிற்றுண்டிகளும் தூக்கி வீசப்பட்டன. இதை பார்த்த பொதுமக்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். எனினும் பொதுமக்கள் மர்மநபர்களில் ஒருவரை பிடித்து கடையநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்த தங்கராஜை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிடிபட்ட நபர் போகநல்லூரைச் சேர்ந்த சுப்பையா பாண்டியன் (54) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்கிடையே தங்கராஜை தாக்கும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.