செல்போனில் 'பிரீபயர்' விளையாடியதில் தகராறு: அரசு பள்ளி மாணவர் மீது தனியார் பள்ளி மாணவர்கள் தாக்குதல் குறிஞ்சிப்பாடியில் பரபரப்பு


செல்போனில் பிரீபயர் விளையாடியதில் தகராறு:    அரசு பள்ளி மாணவர் மீது தனியார் பள்ளி மாணவர்கள் தாக்குதல்    குறிஞ்சிப்பாடியில் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடியில் செல்போனில் ‘பிரீபயர்’ விளையாடியதில் ஏற்பட்ட தகராறில் அரசு பள்ளி மாணவரை தனியார் பள்ளி மாணவர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்


குறிஞ்சிப்பாடி,

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெத்தநாயக்கன்குப்பம் ஆர்.சி. தெருவை சேர்ந்த 16 வயதுடைய மாணவர், குறிஞ்சிப்பாடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருடன், பெத்தநாயக்கன்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்த 16 வயதுடைய மாணவரும் படித்து வருகிறார். நண்பர்களான இருவரும் சென்போனில் 'பிரீபயர்' என்கிற வீடியோ கேமை விளையாடினர். இதில் வெவ்வேறு இடத்தில் இருந்தபடி ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோ கேமை விளையாடிக்கொண்டே, அதன் வழியாக மற்றவர்களுடன் பேச முடியும். அந்த வகையில், ஆன்லைன் வழியாக குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த மாணவர் ஒருவரும் இவர்களுடன் இணைந்து விளையாடினார். அப்போது, அவர்களுக்குள் ஆபாசமாக பேசி, வாய்தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அரசு பள்ளி மாணவர் மீது தாக்குதல்

இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில், பெத்தநாயக்கன்குப்பம் வடக்குதெருவை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

புத்துமாரியம்மன் கோவில் அருகே சென்றபோது, தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர் தன்னுடன் படிக்கும் பாச்சாரப்பாளையத்தை சேர்ந்த 4 மாணவர்களை அழைத்து வந்து, 'பிரீபயர்' விளையாட்டின் போது என்னை ஏன் ஆபாசமாக பேசினீர்கள் என்று கூறி சரமாரியாக தாக்கினர்.

5 மாணவர்கள் மீது வழக்கு

இதில் காயமடைந்த அரசு பள்ளி மாணவர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் தனியார் பள்ளியை சேர்ந்த 5 மாணவர்கள் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story