பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்: நாகரீக மனித சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத மனித உரிமை அத்துமீறல் - முத்தரசன்


பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்: நாகரீக மனித சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத மனித உரிமை அத்துமீறல் - முத்தரசன்
x
தினத்தந்தி 2 Nov 2023 10:23 AM GMT (Updated: 2 Nov 2023 12:13 PM GMT)

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது ஜாதி வெறியர்கள் நடத்தியுள்ள வெறித்தனமான தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

நெல்லை மாநகரில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற தாழ்த்தப்பட்ட பட்டியலின இளைஞர்களை ஆதிக்க சாதியை சேர்ந்த 6 பேர் வழிமறித்து மிரட்டி, அவர்களின் உடமைகளை பறித்துக் கொண்டு, நிர்வாணமாக்கி, அவர்களின் மீது சிறுநீர் கழித்து, கொடூரமான முறையில் அவமானப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவம் நாகரீக மனித சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத மனித உரிமை அத்துமீறலாகும்.

இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தில், குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் சமீபகாலமாக அதிகரித்து வருவது, பெரும் வருத்தம் அளிக்கிறது. இத்தகைய சம்பவங்கள் நடக்க விடாமல் தடுப்பதற்காக அரசியல் உறுதியோடும், சமூக அக்கறையோடும், உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதோடு, உடனடியாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தக்கபடியான தண்டனை வழங்கிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story