ஐடி அதிகாரிகள் மீது தாக்குதல்: தி.மு.க.வினர் 15 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை


ஐடி  அதிகாரிகள் மீது தாக்குதல்: தி.மு.க.வினர் 15 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை
x

கரூரில் வருமான வரி அதிகாரிகளை தாக்கியதாக பதிவான வழக்கில் கவுன்சிலர்கள் உள்பட தி.மு.க.வினர் 15 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

மதுரை,

வருமான வரி முறைகேடு புகார்களின் பேரில் கடந்த மே மாதம் கரூரில் பலரது வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளுக்கு எதிராக சிலர் தகராறில் ஈடுபட்டதாகவும், கூட்டத்தினர் தங்களை தாக்கியதாகவும் போலீசில் அதிகாரிகள் புகார் அளித்தனர்.அதன்பேரில் பல்வேறு நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இவர்களில் கவுன்சிலர்கள் பூபதி, லாரன்ஸ் உள்பட தி.மு.க.வினர் 15 பேருக்கு ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கி கரூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. அதை ரத்து செய்யக்கோரி வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்தும், அவர்கள் அனைவரும் கரூர் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என்றும் சமீபத்தில் உத்தரவிட்டது.அதன்படி அவர்கள் கீழ்கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவா்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த 15 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.இதையடுத்து அவர்கள், ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் பா.நம்பிசெல்வன் ஆஜராகி, மனுதாரர்கள் மீதான வழக்கின் விசாரணை முறையாக நடந்து வருகிறது என்றார்.இதை பதிவு செய்த நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளேன். இதனால் இந்த ஜாமீன் மனுக்களை நான் விசாரிப்பது உகந்ததாக இருக்காது. எனவே இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றும்படி ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு பரிந்துரைக்கிறேன் என உத்தரவிட்டார்.


Next Story