நடுக்கடலில் மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடல் கொள்ளையர்கள் 46 பேர் மீது வழக்கு


நடுக்கடலில் மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடல் கொள்ளையர்கள் 46 பேர் மீது வழக்கு
x

நடுக்கடலில் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக இலங்கை கடல் கொள்ளையர்கள் 46 பேர் மீது கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த இரு நாட்களாக கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது நடுக்கடலில் வைத்து இலங்கை கடல் கொள்ளையர்கள் மீனவர்களை வழிமறித்து கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட பொருட்களால் தாக்கினர். மேலும் அவர்களிடம் இருந்து மீன்பிடி வலைகள், மீன்கள் மற்றும் மீன்பிடி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

கடல் கொள்ளையர்கள் 46 பேர் மீது வழக்கு

இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம் மீனவர்கள் 15 பேர் நாகை மற்றும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக வேதாரண்யம் மீனவர்கள் 5 பேர் கொடுத்த புகாரின்பேரில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், 11 படகுகள் மற்றும் அடையாளம் தெரியாத 46 இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story