ஓடும் பஸ்சில் கண்டக்டர் மீது தாக்குதல்


ஓடும் பஸ்சில் கண்டக்டர் மீது தாக்குதல்
x

வேடசந்தூர் அருகே, ஓடும் பஸ்சில் கண்டக்டரை தாக்கிய சமையல் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

கண்டக்டர் மீது தாக்குதல்

வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு மாரம்பாடி வழியாக அரசு பஸ் நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை, பூபதி (வயது 52) ஓட்டினார். கண்டக்டராக முருகன் (45) பணிபுரிந்தார். பஸ்சில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் 60-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

வேடசந்தூர் அருகே மல்வார்பட்டியை அடுத்த பூத்தாம்பட்டி பிரிவு பகுதியில் பஸ் வந்தது. அப்போது பஸ்சில் பயணம் செய்த பெரியகுளத்துபட்டியை சேர்ந்த அருண்குமார் (31) என்பவர், பள்ளி மாணவிகள் சிலரை அழைத்து தனது அருகே உட்காருமாறு கூறியதாக தெரிகிறது. இதுதொடர்பாக மாணவிகள் கண்டக்டரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து அருண்குமாரை கண்டக்டர் முருகன் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அருண்குமார், கண்டக்டரின் முகத்தில் குத்தினார். மேலும் அவரை சரமாரியாக தாக்கினார். இதில் காயம் அடைந்த கண்டக்டர் நிலைகுலைந்து போய் விட்டார்.

பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டம்

இந்தநிலையில் டிரைவர் பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தினார். அந்த சமயத்தில் பஸ்சை விட்டு இறங்கிய அருண்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதற்கிடையே பஸ்சில் இருந்து அனைத்து பயணிகளும் இறக்கி விடப்பட்டனர்.

அதன்பிறகு கண்டக்டர் முருகனை மட்டும் பஸ்சில் ஏற்றி கொண்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு டிரைவர் சென்றார். அங்கு சிகிச்சைக்காக முருகன் அனுமதிக்கப்பட்டார். ஓடும் பஸ்சில் கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவம், திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு பஸ் கண்டக்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

சமையல் தொழிலாளி கைது

இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை தேடி வந்தனர். இந்தநிலையில் அவர், தனது வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான போலீசார் அங்கு சென்று, அருண்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். கைதான அருண்குமார், ஓசூரில் சமையல் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். விடுப்பில் சொந்த ஊருக்கு வந்தபோது, கண்டக்டரை தாக்கி அருண்குமார் போலீசாரிடம் சிக்கி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story