கோவை பெரியார் ஓட்டல் மீது தாக்குதல்: கி.வீரமணி கண்டனம்
கோவை பெரியார் ஓட்டல் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை என்ற ஊரில் தந்தை பெரியார் பெயரில் உணவு விடுதி(ஓட்டல்) திறக்கும் ஏற்பாடுகளை தோழர் பிரபாகரன் குடும்பத்தினர் செய்த நேரத்தில் இந்து முன்னணியினர் அந்த உணவு விடுதியைத் திறக்கும் முன்பே அடித்து உடைத்து, உரிமையாளரையும் காயப்படுத்தியுள்ளது மிகவும் வன்மையான கண்டனத்திற்குரியது.
திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்றதால், இதுவரை சுமார் 8 பேர் கைது செய்யப்பட்டு, கிரிமினல் சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டு இப்படி வன்முறை கலவரத்தை இந்தப் பகுதியில் உருவாக்கி வருகின்ற நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீஸ்துறை முடுக்கி விடப்பட்டால்தான் அமைதி நிலவும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.