அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்
தர்மபுரியில் அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர், கண்டக்டர் மீது தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை தொப்பூர் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 42) ஓட்டி சென்றார். இந்த பஸ் பழைய தர்மபுரி பகுதியில் சென்ற போது முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு வாலிபர் பஸ்சுக்கு வழிவிடாமல் சென்றுள்ளார். டிரைவர் ஹாரன் அடித்து மோட்டார் சைக்கிளை முந்தி சென்று பழைய தர்மபுரி பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தினார்.
அப்போது அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் பஸ்சை வழிமறித்து டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது டிரைவர் சரவணன் மற்றும் கண்டக்டர் சங்கர் ஆகியோரை அந்த வாலிபர் தாக்கி உள்ளார். இதுகுறித்து டிரைவர் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் மாதேஅள்ளி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (26) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.