மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டு அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் வழங்கினார்
மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகளை அமைச்சா் கே.ஆர். பெரிய கருப்பன் வழங்கினார்.
காரைக்குடி,
மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகளை அமைச்சா் கே.ஆர். பெரிய கருப்பன் வழங்கினார்.
மகளிர் உரிமைத்தொகை
காரைக்குடி பி.எல்.பி. மகாலில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் மாங்குடி, தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மகளிர் உரிமைத்தொகைகளை பயனாளிகளுக்கு ஏ.டி.எம். காா்டுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்..
அப்போது அவர் கூறியதாவது,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தினை மேம்படுத்திடும் பொருட்டும், சமூகத்தில் ஆணுக்கு நிகராக பெண்கள் திகழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்குடனும் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பயனாளிகள்
பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தினை தமிழகம் முழுவதும் செயல்படுத்திடும் பொருட்டு, 1 கோடியே 6 லட்சத்து, 50,ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு முதற்கட்டமாக மாதம் ரூ.1,000 வழங்கும் நிகழ்வினை தமிழ்நாடு முதல் அமைச்சர் காஞ்சீபுரத்தில் தொடங்கி வைத்துள்ளார்.
அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 27 ஆயிரத்து 71 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விண்ணப்பங்கள் அனைத்தும், அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவுத் தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் முன்னேற்றத்திற்காக
பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை பயனாளிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தென்னவன் மாவட்ட வருவாய் அலுவலர்.மோகனச்சந்திரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர்.பால்துரை, காரைக்குடி நகர் மன்றத்தலைவர்.சே.முத்துத்துரை, துணைத்தலைவர்.குணசேகரன், பேரூராட்சி தலைவர்கள் திரு.சேங்கைமாறன், ராதிகா சாந்தி, கார்த்திக் சோலை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செந்தில்குமார், வட்டாட்சியர்கள் தங்கமணி, வெங்கடேசன், தி.மு.க. தலைமைப்பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கரு அசோகன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.ஆர். ஆனந்த் மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும், 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.