ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ரூ.12 லட்சம் தப்பியது
தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. எந்திரத்தை உடைக்க முடியாததால் ரூ.12 லட்சம் தப்பியது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அண்ணா நகர் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு காவலாளி இல்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் ஏ.டி.எம். எந்திரம் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது அந்த ஏ.டி.எம். எந்திரம் பாதி உடைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஏ.டி.எம். மையம் மற்றும் எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மர்ம ஆசாமி ஒருவர் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைவதும், பின்னர் செங்கலால் எந்திரத்தை உடைப்பதும் பதிவாகி உள்ளது. பலமுறை முயற்சி செய்தும் பணம் வைக்கப்பட்டிருக்கும் அறையை அவரால் உடைக்க முடியவில்லை. இதனால் அங்கிருந்து திரும்பி செல்வதும் பதிவாகி உள்ளது. இதனால் அதில் இருந்த ரூ.12 லட்சம் தப்பியது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து வங்கி மேலாளர் தன்ராஜ் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கண்காணிப்பு கேமராவில் பதிவான ஆசாமியை அடையாளம் காண தனிப்படை அமைக்கப்பட்டு்ள்ளது. இந்த தனிப்படை போலீசார் அந்த ஆசாமியை தேடி வருகிறார்கள்.
பொதுவாக ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள சென்சார் அந்த எந்திரத்தை பலவந்தமாக சேதப்படுத்தும்போது கணினி கட்டுப்பாட்டு அறைக்கு தானியங்கி மூலம் தகவல் தெரிவிக்கும். ஆனால் இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள கருவி பழுதாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கொள்ளையன் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும்போது தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.