ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.28 ஆயிரம் அபேஸ்


ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.28 ஆயிரம் அபேஸ்
x

நெல்லையில் பெண்ணை ஏமாற்றி ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.28 ஆயிரத்தை அபேஸ் செய்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லையில் பெண்ணை ஏமாற்றி ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.28 ஆயிரத்தை அபேஸ் செய்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பணம் எடுக்க உதவுவதாக கூறி...

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி மலர்விழி (வயது 52). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.

அப்போது அங்கு வந்த வாலிபர், மலர்விழிக்கு பணம் எடுக்க உதவுவதாக கூறி, அவரது ஏ.டி.எம். கார்டை வாங்கினார். அதன்மூலம் ஏ.டி.எம். எந்திரத்தில் வாலிபர் பணம் எடுத்து மலர்விழியிடம் கொடுத்தார். பின்னர் அவர், மலர்விழியின் ஏ.டி.எம். கார்டை திருப்பி கொடுக்காமல், மற்றொரு ஏ.டி.எம். கார்டை அவரிடம் நைசாக மாற்றி கொடுத்து விட்டு சென்றார்.

ரூ.28 ஆயிரம் அபேஸ்

பின்னர் மலர்விழியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி, அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.28 ஆயிரத்தை வாலிபர் எடுத்தார். தனது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி வாலிபர் மோசடியாக பணத்தை அபேஸ் செய்ததை அறிந்த மலர்விழி அதிர்ச்சி அடைந்து, நெல்லை சந்திப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் பணம் அபேஸ் செய்த வாலிபரை வலைவீசி தேடி வந்தனர்.

சென்னை வாலிபர் கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் நெல்லை சந்திப்பு பகுதியில் ஏ.டி.எம். மையத்தின் அருகில் சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபரை போக்குவரத்து போலீசார் பிடித்து, நெல்லை சந்திப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அவர், சென்னை திருவள்ளூர் பொன்னியம்மன் கோவில்மேடு ஸ்ரீராமன் சாலை பகுதியை சேர்ந்த முருகவேல் மகன் சரவணன் (32) என்பதும், மலர்விழியிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணத்தை அபேஸ் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story