மாணவ, மாணவிகளுக்கு தடகள போட்டிகள்
சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தடகள போட்டிகள்
சிவகங்கை மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து கூறியதாவது,
பள்ளி கல்வித்துறையின் சார்பில் சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான குடியரசுதின தடகள போட்டிகள் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இப்போட்டியில் 8 குறுவட்டத்தை சேர்ந்த 650-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். இப்போட்டியில், குழு விளையாட்டுகளான புதிய 12 விளையாட்டு போட்டிகள், 12 பழைய விளையாட்டு போட்டிகள் மற்றும் 14, 17 மற்றும் 19 வயது ஆகிய பிரிவுகளில் மாணவ, மாணவிகள் பங்கு பெறுகின்றனர். போட்டியில் வெற்றி பெறக்கூடிய மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று கூறினார்.
பதக்கம்
முன்னதாக, மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தேசிய கொடியையும். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஒலிம்பிக் கொடியையும் ஏற்றினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து வருவாய் மாவட்ட கொடியினை ஏற்றி வைத்தார். அதன்பின் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.
ஒலிம்பிக் ஜோதியை கலெக்டர் விளையாட்டு வீராங்கனையிடம் ஒப்படைத்தார். மேலும் தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.