அத்திப்பள்ளி பட்டாசு கடை வெடி விபத்து: எடப்பாடி பழனிசாமி இரங்கல்


அத்திப்பள்ளி பட்டாசு கடை வெடி விபத்து: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
x
தினத்தந்தி 8 Oct 2023 9:52 AM IST (Updated: 8 Oct 2023 10:20 AM IST)
t-max-icont-min-icon

அத்திப்பள்ளி பட்டாசு கடை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடைகளுக்கு 3 சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் அடங்கிய அட்டை பெட்டிகள் நேற்று வந்து இறங்கின. அப்போது பட்டாசு பெட்டிகளை இறக்கும்போது திடீரென பட்டாசுகள் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வெடி விபத்து தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 14 பேர் வரை உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்புகளையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன்.

மேலும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கும் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையை, இந்த விடியா திமுக அரசு உடனடியாக வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


Next Story