கால்வாயின் மேல் அந்தரத்தில் நின்ற அரசு பஸ்சால் பரபரப்பு
கடையம் அருகே, `ஸ்டீயரிங் நட்' துண்டித்ததால் கால்வாயின் மேல் அந்தரத்தில் அரசு பஸ் நின்றது. அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடையம்:
கடையம் அருகே, `ஸ்டீயரிங் நட்' துண்டித்ததால் கால்வாயின் மேல் அந்தரத்தில் அரசு பஸ் நின்றது. அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு பஸ்
தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து ரவணசமுத்திரம் வழியாக நெல்லைக்கு நேற்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர்.
கடையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரவணசமுத்திரம் அருகே பஸ் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் உள்ள கால்வாயின் தடுப்புச்சுவரை தாண்டி அந்தரத்தில் நிற்பதுபோல் நின்றது. இதை பார்த்ததும் பயணிகள் அலறினார்கள்.
அந்தரத்தில்....
அந்த தடுப்புச்சுவர் அய்யம்பிள்ளை குளத்திற்கு செல்லும் கால்வாயின் மீது கட்டப்பட்டுள்ளது. தடுப்புச்சுவரை தாண்டி கால்வாயின் மேல் அந்தரத்தில் அந்த பஸ் நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கால்வாயின் தரைப்பகுதிக்கும், மேலே உள்ள ரோட்டின் தடுப்புச்சுவருக்கும் சுமார் 10 அடி உயரம் இருக்கும். பஸ் கால்வாயில் பாய்ந்து இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். ஆனால் இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
அந்த பஸ்சின் ஸ்டீயரிங் நட் துண்டித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் சாதுர்யமாக பஸ்சை நிறுத்திய டிரைவரை பலரும் பாராட்டினார்கள்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.