அரசு தொழில் மைய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


அரசு தொழில் மைய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x

நெல்லையில் வருமானத்துக்கு அதிகமாக ெசாத்து குவித்ததாக வந்த புகாரின் பேரில் அரசு தொழில் மைய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின.

திருநெல்வேலி

சொத்து குவித்ததாக புகார்

நெல்லை பாளையங்கோட்டை ரகுமத்நகரை சேர்ந்தவர் முருகேஷ்.

இவர் நெல்லை மாவட்ட அரசு தொழில் மையத்தில் மேலாளராக பணியாற்றிய காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார்கள் வந்தன. அதன்பேரில் நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

லஞ்ச ஒழிப்பு சோதனை

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மெக்லரின் எஸ்கால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், சீதாராமன் மற்றும் ஏட்டுகள் பிரகாஷ், ஜேம்ஸ், ராபின் ஆகியோர் அடங்கிய குழுவினர் ரகுமத்நகரில் உள்ள முருகேஷின் வீட்டுக்கு நேற்று காலை 7 மணி அளவில் சென்றனர். வீட்டின் கதவை உடனடியாக போலீசார் பூட்டினார்கள்.

அப்போது, வீட்டில் முருகேசின் மனைவி, 2 மகள்கள் இருந்தனர். அவர்களது செல்போன்களை வாங்கிய போலீசார் சுவிட்ச் ஆப் செய்தனர். வீட்டின் பல்வேறு அறைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். யாரும் வெளியே செல்லவோ?, வெளியே இருந்து உள்ளே வரவோ? அனுமதி அளிக்கப்படவில்லை.

ஆவணங்கள் சிக்கின

இரவு வரை நீடித்த இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.

முருகேஷ் கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மையத்தில் மேலாளராக பணியாற்றிய ேபாது, அங்கு அவர் துறை ரீதியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லையில் அரசு தொழில் மைய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story