தை அமாவாசையையொட்டி, உழவர் சந்தைகளில்ரூ.87½ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை


தை அமாவாசையையொட்டி, உழவர் சந்தைகளில்ரூ.87½ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
x

தை அமாவாசையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ரூ.87½ லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டன.

சேலம்

சேலம்,

தை அமாவாசை

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, ஆட்டையாம்பட்டி, ஆத்தூர், மேட்டூர், தம்மம்பட்டி, ஜலகண்டாபுரம், இளம்பிள்ளை, எடப்பாடி என 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளுக்கு விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைச்சல் அடைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று தை அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் காய்கறிகள் வாங்குவோரின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக சந்தையில் அகத்திக்கீரை, வாழை இலை, வாழைப்பழம், கத்தரிக்காய், அவரைக்காய், பூசணிக்காய், வெள்ளை பூசணிக்காய் போன்றவைகள் அதிக அளவில் விற்பனையானது.

சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் 209 விவசாயிகள் மொத்தம் 40 டன் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதன் மூலம் ரூ.14 லட்சத்து 59 ஆயிரத்து 139-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரூ.87½ லட்சத்துக்கு விற்பனை

தாதகாப்பட்டி உழவர் சந்தைக்கு 180 விவசாயிகள் மொத்தம் 38 டன் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அவைகள் ரூ.14 லட்சத்து 27 ஆயிரத்து 707-க்கு விற்பனை செய்யப்பட்டன. அம்மாபேட்டை உழவர் சந்தையில் 84 விவசாயிகள் கொண்டு வந்த 17 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.6 லட்சத்து 99 ஆயிரத்து 10-க்கு விற்பனை செய்யப்பட்டன. அஸ்தம்பட்டி உழவர் சந்தைக்கு 77 விவசாயிகள் 18 டன் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதன்மூலம் ரூ.6 லட்சத்து 65 ஆயிரத்து 323-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகள் கூறும் போது, 'தை அமாவாசையொட்டி மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளுக்கு 1,010 விவசாயிகள் 245 டன் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இவை ரூ.87 லட்சத்து 49 ஆயிரத்து 999-க்கு விற்பனை ஆனது. இந்த காய்கறிகளை 54 ஆயிரத்து 724 நுகர்வோர்கள் வாங்கி சென்றனர்' என்றனர்.


Next Story