மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள்
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
பணியாளர் தேர்வு ஆணையத்தால் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 கல்வித் தகுதி நிலையிலான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த 6-ந்தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வு அறிவிப்பின்படி 4,500 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந்தேதி கடைசி நாள் ஆகும். தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பாக இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
தேர்ந்த வல்லுனர்களைக் கொண்டு தேர்வுக்கான பாடத்திட்டத்தின்படி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். தகுதியுடையவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 27 வரை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டும் வயதில் தளர்வு உண்டு. விருப்பமுள்ளவர்கள் https://ssc.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். இத்தகவல் மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.