நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பால்குடம், பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம், பறவைக்காவடி எடுத்தும், அலகு குத்தி, பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இன்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

புதுக்கோட்டை

முத்துமாரியம்மன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுேதாறும் பங்குனி திருவிழா பூச்சொரிதல், கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த மாதம் 26-ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. கடந்த 2-ந்தேதி பங்குனி திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது.

இதையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது. இதேபோல் மண்டகப்படி நிகழ்ச்சிகளும் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

பக்தர்கள் நேர்த்திக்கடன்

முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நார்த்தாமலை, கீரனூர், அன்னவாசல் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கடந்த சில நாட்களாக விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள். நேற்று காலை முதல் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதேபோல் கரும்பால் தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

இன்று தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர். கோவிலுக்கு சென்றுவர வசதியாக புதுக்கோட்டை, கீரனூர், அன்னவாசல் பகுதிகளில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் தேர்திருவிழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் கீரனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

படையலிட்டனர்

திருவரங்குளம் வட்டார பகுதிகளில் உள்ள வேப்பங்குடி, திருவரங்குளம், நிமனேஸ்வரம், பூவரசங்குடி, கைகுறிச்சி, மேட்டுப்பட்டி, கேப்பரை, தோப்பு கொல்லை, திருக்கட்டளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் விரதம் இருந்து நார்த்தாமலை மாரியம்மனை மஞ்சளில் செய்து வேப்பிலை வைத்து வீட்டில் எழுந்தருள செய்து பொங்கல் வைத்தும், தேங்காய், பழம், பானகம், நீர்மோர், கொழுக்கட்டை உள்ளிட்டவைகளை படையலிட்டனர். பின்னர் தீபாராதனை காண்பித்தும், ஆடு, கோழியை பலியிட்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு பொங்கல் வைத்தும், இறைச்சிகளை வீடுகளில் படைத்து வழிபடுவது வழக்கம். இதனால் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகளை வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் கீரனூரில் குவிந்தனர். இதனால் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. அதேபோல் பூக்கள், பழங்களை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதியது.


Next Story